காலணியை வீசிய கட்சியினரை விஜய் ஆதரிக்கிறாரா? - நயினார் நாகேந்திரன் கேள்வி
தூத்துக்குடி, 16 நவம்பர் (ஹி.ச.) ''தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்'' என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்த
Thoothukudi Nainar Nagenthran


தூத்துக்குடி, 16 நவம்பர் (ஹி.ச.)

'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,

பீகார் மாநில தேர்தலைப் பற்றி பலர் ஏளனமாக பேசினார்கள். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வி அடையும் எனக் கூறினார்கள். ஆனால், இப்போது அங்கு என்ன நடந்தது? பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆர்ஜேடி கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தப்பித்தோம் பிழைத்தோம் என வெற்றி பெற்றுள்ளார். அது மட்டுமா? காங்கிரஸ் வெறும் 6 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதற்கு அவர்கள் கட்சியையே கலைத்துவிட்டு செல்லலாம். இவர்கள் பாரதப் பிரதமர் மோடியை குறை கூறுகிறார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை (SIR) எதிர்த்து தவெக நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளதே.. என நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.

உடனே ஆவேசமான நயினார் நாகேந்திரன், அப்படியென்றால், இறந்தவர்களின் ஓட்டுகளை வாங்க விஜய் விரும்புகிறாரா? என்ன பேசுகிறார் அவர்? கொளத்தூர் தொகுதியில் 9,000 ஓட்டுகள் அதிகமாக இருக்கின்றன. அது ஸ்டாலினுக்கு கிடைக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரா? எந்த காரணத்திற்காக அவர் ஆதரவாக இருக்கிறார்?

கரூரில் உங்கள் (விஜய்) மீது செருப்பை கழற்றி வீசிய கட்சிக்கு ஆதரவாக இருக்கிறீர்களா? உங்கள் கூட்டத்தில் 41 பேர் இறந்தார்களே.. அவர்களின் பிணங்களின் மீது நடந்து வந்து ஸ்டாலினுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்களா? விஜய் என்ன சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளாரா? குறைந்தபட்சம், கவுன்சிலர் பதவியிலாவது இருந்திருக்கிறாரா? எதுவுமே இல்லை. அப்படியிருக்கும்போது, நீங்கள் (நிருபர்கள்) ஏன் அவரை பற்றி பேசுறீங்க. பேச்சை விடுங்க என காட்டமாக கூறினார்.

தொடர்ந்து, அரசியல் களத்தில் திமுக வெற்றி பெற நீங்கள் மறைமுகமாக உதவுகிறீர்கள் என பேச்சு அடிபடுகிறதே? என நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு கோபமாக பதிலளித்த நயினார் நாகேந்திரன், இது மோசமான கேள்வி. அதிகப்பிரசங்கித்தனமான கேள்வி. நான் ஒரு கட்சியின் தலைவன். நான் எப்படி திமுக வெற்றிக்கு உதவுவேன்? இதுபோல வேறு எந்த தலைவரிடமும் கேட்காதீர்கள் எனக் கூறினார்.

முன்னதாக, கோவில்பட்டியில் பிரச்சாரம் செய்த நயினார் நாகேந்திரன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் பேசினார்.

அவர் பேசுகையில், மதுவால் தமிழ்நாட்டில் விதவைகள் அதிகமாக உள்ளதாக அதிமுக ஆட்சிக்காலத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். ஆனால் இப்போது அவர் ஏன் வாய் திறக்கவில்லை? டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. தீபாவளிக்கு மட்டும் ரூ. 250 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதனால்தான் அவர் வாய் திறப்பதில்லை.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001இல் ரூ.50 லட்சம் கடனில் இருந்தார். தற்போது ரூ.500 கோடி சேர்த்திருக்கிறார். யாருடைய பணம் அது? எல்லாம் மக்களின் பணம். அனிதா ராதாகிருஷ்ணன் மக்கள் மத்தியில் ஜாதி வெறியை தூண்டி வருகிறார். மக்களை பிளவுபடுத்துகிறார்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணனை நீங்கள் ஓட ஓட விரட்ட வேண்டும். அவர்களை போன்ற ஆட்கள் நாட்டில் உலவக் கூடாது.

நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? என்று ஜெயலலிதா பாணியில் நயினார் நாகேந்திரன் பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN