தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து - வடமாநில இளைஞர் இருவர் படுகாயம்
திருவள்ளூர், 16 நவம்பர் (ஹி.ச.) காக்களூர் ஊராட்சியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், தி
Tiruvallur Hospital


திருவள்ளூர், 16 நவம்பர் (ஹி.ச.)

காக்களூர் ஊராட்சியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பகல் மற்றும் இரவு பணியில் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இரவு பணியில் (அலுமினியத்தை உருக்கும்) வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக தொழிற்சாலையில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியில் இருந்த சிவக்குமார், இந்திரகுமார் ஆகிய இரண்டு வட மாநில இளைஞர்களுக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.

வெடி சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள், படுகாயமடைந்த 2 தொழிலாளர்களையும் தீக்காயங்களுடன் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இந்த விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் என்ன? இந்த விபத்தில் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN