Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 16 நவம்பர் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ. ஆர்) குளறுபடிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த தவெக சார்பில் மலைக்கோட்டை, சறுக்குபாறை பகுதியில் இன்று(நவ 16) மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தவெக துணைப் பொதுச்செயலாளரும், கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான ராஜ்மோகன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர்கள் திருச்சி மாநகர் சந்திரா, புறநகர் வடக்கு ஜெகன் மோகன், புறநகர் மேற்கு ரவிசங்கர், புறநகர் கிழக்கு லால்குடி விக்னேஷ், கிழக்கு தொகுதி கரிகாலன், திருவெறும்பூர் தொகுதி அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் செந்தில், மகளிரணி துளசி, வடக்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.எஸ்.சிவா, சுந்தர், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து இன்று மலைக்கோட்டையில் எழுப்பிய கோஷங்கள் செயின்ட் ஜார்ஜ் மற்றும் செங்கோட்டைகளில் எதிரொலிக்கும். 3 அடிக்கு மேல் மேடை போடக்கூடாது என்றனர்.
பவளவிழா நடத்தியவர்கள் 15 அடிக்கு மேடை அமைத்தார்கள். இதைத் தான் திமுக தலைமை விரும்புகிறார்கள். அனுமதி வாங்கி நடக்கும் கூட்டத்துக்கு கட்சியினரை வரவிடாமல் அலைக்கழித்தனர்.
விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணம் விரைவில் தொடங்க உள்ளது. இது தொடர்பாக நிர்வாகக் குழுவிலிருந்து, அனைத்து அணிகளையும் வலுப்படுத்தி, எஸ்ஓபி ஆணைகளை பின்பற்றி மக்கள் சந்திப்பு நடக்கும்.
விஜய்யின் போராட்ட வடிவம் என்பது பாமரனுக்கும் புரியும் வகையில் இருக்கும். அவர் பதிவிட்ட 10 நிமிட காணொலியால் தேர்தல் ஆணைய சர்வரே முடங்கும் அளவுக்கு ஏராளமானோர் அதை பார்வையிட்டுள்ளனர். அவர் பேசியதன் விளைவே பெரிய பேசுபொருளாக மாறி உள்ளது.
தமிழகத்தில் 29 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 1.50 கோடி பேர் உள்ளனர். வரும் தேர்தலில் இளம் வாக்காளர்களின் அன்பை வெல்லக்கூடியது புதிய அரசியல் கட்சியினர் தான். இதையடுத்தே அதிதீவிரமாக எஸ்.ஐ.ஆரை மத்திய அரசு கொண்டு வந்தது. இதில் மத்திய அரசுக்கு மறைமுகமாக நட்புறவாக இங்குள்ள மாநில அரசு செயல்படுகிறது.
சட்டப்பேரவையில் தீர்மானம் கூட போடவில்லை. எஸ்ஐஆரை வைத்து பிஹாரில் ஒரு தேர்தலையே முடித்துவிட்டனர்.
அந்த முடிவு தந்த அதிர்ச்சியிலிருந்து யாரும் மீளவில்லை. அதுபோன்ற சூழல் தமிழகத்தில் ஏற்படக்கூடாது. அதன் நீட்சி தான் விஜய் வெளியிட்ட காணொலி.
இன்று தமிழகம் முழுவதம் போராட்டம் நடைபெற்றுள்ளது.
அடுத்தடுத்த நாளில் அவர் வெளியில் வரத்தான் போகிறார்.
பேசப்போகிறார்.
அவர் பேசும் ஒவ்வொரு பேச்சும் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப் போகிறது.
எஸ்ஐஆர் படிவங்களை பிஎல்ஓக்கள் தந்தாலும், திமுக பிரமுகர்கள் பெறுகின்றனர். கட்சி பேதங்களைத் தாண்டி வாக்குரிமையை பாதுகாக்க தேர்தலை நேர்மையாக நடத்துவதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ