UDGAM போர்ட்டலைப் பயன்படுத்தி மறந்துபோன வங்கி பணத்தை கண்டறிந்து உரிமைகோரலாம்! - முழு விவரம்
சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிமுகப்படுத்தியுள்ள UDGAM (Unclaimed Deposits – Gateway to Access Information) போர்ட்டலைப் பயன்படுத்தி, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள, பயன்படுத்தப்படாமல் உள்ள பழைய வங்கிக் கணக்கு
UDGAM  போர்ட்டலைப் பயன்படுத்தி மறந்துபோன வங்கி பணத்தை கண்டறிந்து உரிமைகோரலாம்! - முழு விவரம்


சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிமுகப்படுத்தியுள்ள UDGAM (Unclaimed Deposits – Gateway to Access Information) போர்ட்டலைப் பயன்படுத்தி, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள, பயன்படுத்தப்படாமல் உள்ள பழைய வங்கிக் கணக்கு வைப்புத் தொகைகளை (Unclaimed Deposits) எளிதாகக் கண்டறிந்து, அதை மீண்டும் உரிமைகோரலாம். அது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

UDGAM என்றால் என்ன?

வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் இருக்கும் செயலற்ற (Dormant) கணக்குகள், நிரந்தர வைப்புத் தொகைகள் (Fixed Deposits) அல்லது சேமிப்புக் கணக்குகள் ஆகியவற்றில் உள்ள பணத்தை வங்கிகள் Depositor Education and Awareness (DEA) Fund என்ற நிதிக்கு மாற்றிவிடும்.

இந்த பணத்தை அதன் அசல் உரிமையாளரோ அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளோ எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். இந்த உரிமைக் கோரப்படாத வைப்புத் தொகைகளைக் கண்டறிந்து, உரிமையாளரிடம் சேர்ப்பதற்காகவே RBI இந்த UDGAM இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

உரிமை கோரப்படாத பணத்தை எப்படி கண்டுபிடிப்பது?

உங்கள் குடும்பத்தின் பெயரில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை உள்ளதா என்பதை அறிய, இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:

அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் செல்லவும்: https://udgam.rbi.org.in/unclaimed-deposits

முதலில் உங்களின் மொபைல் எண், பெயர், கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி இணையதளத்தில் பதிவு (Register) செய்ய வேண்டும். பின்னர், பதிவு செய்த மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும் (Login).

வைப்புத் தொகை வைத்திருப்பவரின் பெயர் (Name of the account holder). பிறந்த தேதி (Date of Birth). பான் எண் (PAN) விவரங்களை கொடுக்கவும்.

தேட விரும்பும் வங்கிகளை தேர்ந்தெடுக்கவும். தற்போது 30-க்கும் மேற்பட்ட முக்கிய இந்திய வங்கிகளைத் தேடலாம். நீங்கள் 'All' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அனைத்து வங்கிகளிலும் ஒரே நேரத்தில் தேடலாம்.

தேடலை மேற்கொண்ட பிறகு, ஏதேனும் வைப்புத் தொகை பொருந்தி வந்தால், அந்த வங்கியின் பெயர் மற்றும் கிளையின் விவரங்களை போர்ட்டல் காண்பிக்கும்.

பணத்தை திரும்பப் பெறுவது எப்படி?

UDGAM போர்ட்டலில் உங்களின் பெயரில் அல்லது குடும்ப உறுப்பினரின் பெயரில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை இருப்பதை நீங்கள் கண்டறிந்தால், பணத்தை திரும்பப் பெற கீழே உள்ள படிகளைப் பின்பற்றலாம்:

1. கிளையை அணுகவும்: தேடல் முடிவில் காட்டப்பட்ட குறிப்பிட்ட வங்கி கிளையை நேரில் அணுகவும்.

2. தேவையான ஆவணங்கள்: பணத்தை உரிமைகோர, நீங்கள் செல்லுபடியாகும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:

3. கே.ஒய்.சி ஆவணங்கள் (KYC Documents): ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள்.

4. வாரிசுகள் கோரினால்: அசல் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், நீங்கள் சட்டப்பூர்வ வாரிசு என்பதை நிரூபிக்க, இறப்புச் சான்றிதழ், வாரிசுரிமைச் சான்றிதழ் (Succession Certificate) அல்லது உயில் (Will) போன்ற ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் சரிபார்ப்பு:

* வங்கி கிளையில் உரிமைகோரல் படிவத்தை (Claim Form) பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்.

* வங்கி நிர்வாகம் உங்கள் உரிமைகோரலை சரிபார்த்து, அதன் பிறகு வைப்புத் தொகையை உங்கள் கணக்கிற்கு மாற்றும் செயல்முறையைத் தொடங்கும்.

இந்த போர்ட்டல், உங்கள் குடும்பத்தின் பழைய மற்றும் மறக்கப்பட்ட சேமிப்பை மீண்டும் கண்டறிய ஒரு எளிய வழியாகும்.

Hindusthan Samachar / JANAKI RAM