Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றலை மேம்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர வெளி முகமைகள் மூலமும் அவ்வப்போது ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்தவகையில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மைசூரில் உள்ள தென்னிந்திய பிராந்திய மொழி நிறுவனத்தின் சார்பில் 5 நாட்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த முகாமில் பொம்மைகள், விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை குறித்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. அதன்படி பயிற்சி இன்று (நவம்பர் 17) தொடங்கி 21ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b