Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 17 நவம்பர் (ஹி.ச.)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் இன்று (நவ 17) தொடங்கி ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை 65 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.
இதனால் கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் இன்று முதல் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நகராட்சி, போலீசார், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட துறைகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கூறியதாவது,
கன்னியாகுமரியில் சபரிமலை சீசனை முன்னிட்டு மொத்தம் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தினமும் 150 பேர் வீதம் மூன்று சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி தெரிந்த போலீசார்களும் நியமிக்கப்படுகிறார்கள். திரிவேணி, கடற்கரை சாலை, சீரோ பாயிண்ட் உள்ளிட்ட 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.
நகரம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பராமரிக்கப்பட்டுள்ளன. மேலும் 10 புதிய கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b