Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)
சென்னையில் வீதிகளில் மாடுகளை நடமாட விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் மாடுகள் நடமாடுவதோடு அவ்வப்போது சாலையில் செல்லும் மக்களை அச்சுறுத்துவது வாடிக்கையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கணக்கெடுப்பின்படி சென்னையில் 23 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் மாடுகள் வீடுகளில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வீடுகளில் வளர்க்கப்பட வேண்டிய மாடுகளை மாட்டின் உரிமையாளர்கள் சாலைகளில் நடமாட விடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ஏற்கனவே மாநகராட்சி சார்பில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதோடு தொடர்ந்து மூன்று முறை பிடிபடும் மாட்டினை பறிமுதல் செய்யவும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இருந்தும் சென்னையின் பிரதான சாலைகளில் மாடுகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், மாடுகள் பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்களும் அவ்வப்போது புகாராக வருவதால், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகள் வைத்திருப்போர், மாட்டின் உரிமையாளர்கள் பெயர் மற்றும் முகவரியுடனான பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் இனி சாலையில் மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது போலீசார் உதவியுடன் கடும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ