Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)
ஹரியானா மாநிலத்தில் 9.11.2025 அன்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான 18வது நகர்ப்புற போக்குவரத்து இந்தியா (Urban Mobility India) மாநாட்டில் தேசிய அளவில் கலந்து கொண்ட 17 பெருநகரங்களில் “நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக” சென்னை — மாநகர் போக்குவரத்து கழகம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த பல்முனை போக்குவரத்து ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ இரயில் (Metro Rail with the Best Multimodal Integration) என்ற பிரிவின் கீழ், நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்து விளங்குவதற்கான விருது (Award of Excellence in Urban Transport) மற்றும் சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ இரயில் (Metro Rail with the Best Passenger Services and Satisfaction) என்ற பிரிவின் கீழ் நகர்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழ் (Commendation Award in Urban Transport) ஆகிய விருதுகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.
இவ்விருதுகளை முதல்வர் ஸ்டாலினிடம் இன்று (17.11.2025) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை-மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் த. பிரபுசங்கர் ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
Hindusthan Samachar / vidya.b