Enter your Email Address to subscribe to our newsletters

துபாய், 17 நவம்பர் (ஹி.ச.)
துபாயில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மாபெரும் விமான கண்காட்சியில் உலகம் முழுவதும் இருந்து முன்னணி உற்பத்தியாளர்கள் பங்கேற்பது வழக்கம். போக்குவரத்து மற்றும் போர் விமானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இக்கண்காட்சி மிகவும் முக்கியமானது.
இந்தாண்டு கண்காட்சி, இன்று (நவ 17) தொடங்கி நாளை (நவ 18) வரை நடைபெறவுள்ளது . உலகம் முழுவதும் இருந்து 1500 விமானம் மற்றும் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றனர். 150 நாடுகளில் இருந்து விமான தொழில் துறையை சேர்ந்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் பார்வையிட வருகின்றனர்.
உலகின் முன்னணி விமான உற்பத்தி நிறுவனங்களான பம்பார்டியர், டசால்ட், எம்பிரேர், தேல்ஸ், ஏர்பஸ், லாக்ஹீட் மார்ட்டின், காலிடஸ் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை காட்சிப்படுத்துகின்றனர். இந்தியா சார்பில் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட், டி.ஆர்.டி.ஓ., கோரல் டெக்னாலஜீஸ், டேண்டல் ஹைட்ராலிக்ஸ், இமேஜ் சினர்ஜி எக்ஸ்புளோரர், எஸ்.எப்.ஓ., டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இது மட்டுமின்றி, பாரத் போர்ஜ், பிரம்மோஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன. 15 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அரங்கு அமைந்துள்ளன. இந்திய விமானப்படையினரின் சூரியகிரண் ஏரோபேட்டிக் அணியினர் சாகச நிகழ்ச்சி நடத்துகின்றனர். தேஜஸ் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இந்த கண்காட்சியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் மத்திய அமைச்சர் சஞ்சய் சேத், இந்திய விமானப்படை சார்பில் 50 நாடுகளை சேர்ந்த நிறுவனத்தினருடன் பேச்சு நடத்துகிறார்.
ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, உற்பத்தி தொடர்பாக இந்திய குழுவினர் பேச உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b