Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 நவம்பர் (ஹி.ச.)
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பீகார் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கர்நாடக மந்திரிசபை மாற்றம் குறித்தும் பேசியதாக சொல்லப்பட்டது.
ஆனால் இதை மறுத்த சித்தராமையா, பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியால் வருத்தத்தில் உள்ள ராகுல் காந்திக்கு தைரியம் கூறியதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் நேற்று முன்தினம் டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) நடக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சந்திப்பின்போது, முதல்-மந்திரி சித்தராமையாவை மாற்றிவிட்டு தனக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்பாரா அல்லது மந்திரிசபை மாற்றம் குறித்து மட்டுமே பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் ஏற்பட்ட படுதோல்வியால் துவண்டுபோய் உள்ள காங்கிரஸ் மேலிட தலைவர்கள், கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையாவை மாற்றிவிட்டு அதனால் ஏற்படும் குழப்பத்தில் சிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் தற்போதைக்கு சித்தராமையா மாற்றப்பட மாட்டார் என்றே சொல்லப்படுகிறது. ஆனால் இதை டி.கே.சிவக்குமார் ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகாரில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வியை கருத்தில் கொண்டு டி.கே.சிவக்குமார் இன்னும் சில மாதங்கள் அமைதியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் நிச்சயம் மந்திரிசபை மாற்றம் இருக்கும் என்றும், மூத்த மந்திரிகளை மந்திரிசபையில் இருந்து கழற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM