Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 17 நவம்பர் (ஹி.ச.)
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை விசாரணை மேற்கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு சனிக்கிழமை முதல் நேரடியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
7-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகச் சென்று கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள விவிஜிஆர் நகர் மற்றும் சிவலிங்கா ஆசாரியார் தெருவில் வசிக்கும் நெரிசலில் சிக்கிக் காயமடைந்த உஷா மற்றும் அவரது தாயார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை கரூர் மாவட்டம் க. பரமத்தி பகுதியில் உள்ள பவர் கிரீட் நிறுவனத்தில் பணியாற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் 2 பேர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஐந்து பேர் ஆகியோர் சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்கு காலை 11:30 மணியளவில் வருகை தந்தனர்.
அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN