Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 17 நவம்பர் (ஹி.ச.)
கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 560 ஏக்கர் நிலங்களை அப்பகுதியில் வசிப்பவர்கள் கடந்த 1962 ஆம் ஆண்டுக்கு முன்பு வருவாய்த்துறை மூலம் பட்டா வாங்கி அவற்றில் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் திருத்தொண்டர் அறக்கட்டளையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கோயில் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அண்மையில் உத்தரவிட்டது.
மேலும் விரைவில் கோயில் நிலங்களை மீட்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெண்ணைமலை கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களின் வீடுகளுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்கள் கோயிலுக்கு வாடகையோ அல்லது ஆண்டு குத்தகையோ செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு வாடகை அல்லது குத்தகையோ செலுத்தாத நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் அவர்களின் வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கடந்த மாதம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வெண்ணைமலை கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 7 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இதையடுத்து கடந்த இரு வாரங்களுக்கு முன் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கடைகளுக்கு மீண்டும் சீல் வைக்க முயன்ற போது அப்பகுதியினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.
தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் திருத்தொண்டர் சபை அறக்கட்டளை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த இரு தினங்களுக்கு முன் கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் ஆகியவற்றை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களின் வீடுகளுக்கு மின்சப்ளை எங்கெங்கு எந்த எந்த அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்டிருக்கிறது என்பதை குறித்தும் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை கோயில் நிலத்தில் குடியிருப்பவர்கள் வீடுகளில் அனைத்துக்கும் சீல் வைக்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்ததால் இன்று காலை கோயில் நிலத்தில் குடியிருப்பவர்கள் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் முன் காலை 8 மணி முதல் குவிந்தனர்.
தொடர்ந்து கோயில் முன் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மற்றும் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் நன்மாறன், மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், மாவட்ட அவைத் தலைவர் எஸ்.திருவிகா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது.
வழக்கு கீழமை நீதிமன்றத்தில் உள்ளது. அவ்வாறு இருக்கும் போது வீடுகளுக்கு சீல் வைக்கவோ அல்லது பூட்டுகள் போடவோ மற்றும் மின் இணைப்பு துண்டிப்பதோ கூடாது. அவ்வாறு சீல் வைக்க அதிகாரிகள் முற்பட்டால் நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்று பேசினர்.
தொடர்ந்து கோயில் நிலத்தில் குடியிருப்பவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN