Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இசிஆரில் அரண்மனை போன்ற வீடு கட்டியதாகவும், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக புதுமனை புகு விழா நடத்தியதாகவும் மல்லை சத்யா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
மதிமுகவின் முக்கிய நிர்வாகியாகவும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் நீண்ட கால உயிர் நண்பனாகவும் விளங்கி வந்தவர் மல்லை சத்யா. மதிமுகவில் வைகோவுக்கு அடுத்த பொறுப்பில் இருந்த மல்லை சத்யாவின் முக்கியத்துவம் வைகோவின் மகன் துரை வைகோ முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டவுடன் குறைந்து போனது.
குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, தனது மகன் துரை வைகோவுக்கு கட்சித் தலைமையை வழங்கியதாக மல்லை சத்யா பரபரப்பு குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து வைகோ மீதும், துரை வைகோ மீதும் மல்லை சத்யா குற்றச்சாட்டுகளை வாரி இறைத்ததால் மதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்த மல்லை சத்யா, வைகோ இசிஆரில் அரண்மனை போன்ற வீடு கட்டியுள்ளதாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் வைகோவுக்கு ரூ.250 கோடி சொத்து உள்ளதாகவும் கூறி இன்று அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மல்லை சத்யா, ''தனது மகன் கட்சிக்கு வந்தது முதல் வைகோ என்னை அலட்சியப்படுத்த தொடங்கினார்.
வைகோ தனது அரசியல் பாதையை விட்டு திசைமாறி சென்று கொண்டிருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் இசிஆரில் 10 கிரவுண்டில் அரண்மனை போன்ற ஒரு வீட்டை கட்டியுள்ளார். இது வெளியே யாருக்கும் தெரியாது.
இந்த செய்தி வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த வைகோ, அந்த அரண்மனை போன்ற வீட்டுக்கு ரகசியமாக புதுமனை புகு விழா நடத்தினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வைகோவுக்கு ரூ.250 கோடி சொத்துகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய நட்சத்திர விடுதியையும் வைகோ வாங்கினார்'' என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வைகோ இசிஆரில் அரண்மனை போன்ற வீடு வாங்கியதாக சில மாதங்களுக்கு முன்பும் மல்லை சத்யா குற்றச்சாட்டு முன்வைத்து இருந்தார்.
இந்த வீடு பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதாகவும், நீச்சல் குளம், ஜிம், தியேட்டர் ரூம், ஹெலிபேட் போன்ற வசதிகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் மூத்த தலைவரான வைகோ மீது அவருடன் நீண்ட காலம் பயணித்தவரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
க்
Hindusthan Samachar / ANANDHAN