Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 17 நவம்பர் (ஹி.ச.)
பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெற்றது. 14-ந் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில், பா.ஜனதா கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
18-வது புதிய சட்டசபையை அமைத்ததற்கான அறிவிப்பாணை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான பணி வேகம் எடுத்துள்ளது.
கவர்னர் ஆரிப் முகமது கானிடம் தேர்தல் இறுதி முடிவுகளை தேர்தல் கமிஷன் எடுத்துரைக்கும். அத்துடன், தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வரும்.
புதிய மந்திரிசபை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வழிமுறை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. நிதிஷ்குமாரை மீண்டும் முதல்-மந்திரி பதவியில் அமர்த்த தயக்கம் காட்டி வந்த பா.ஜனதா, அவருக்கு முதல்-மந்திரி பதவி அளிக்க சம்மதம் தெரிவித்தது.
மேலும், கூட்டணி கட்சிகள் அனைத்துக்கும் மந்திரி பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. 6 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருந்தால், ஒரு மந்திரி பதவி என்ற வழிமுறை உருவாக்கப்பட்டது.
அதன்படி, பா.ஜனதாவுக்கு மந்திரிசபையில் கூடுதல் இடம் அளிக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். அதாவது பா.ஜனதாவில் இருந்து 15 அல்லது 16 பேரும், ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த 14 பேரும் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.
மேலும் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 3 மந்திரி பதவிகளும், மத்திய மந்திரி ஜிதன்ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு மந்திரி பதவியும் அளிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
நிதிஷ்குமார் இன்று (திங்கட்கிழமை) மந்திரிசபை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில், 17-வது சட்டசபையை கலைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். அந்த தீர்மானம் நிறைவேறியவுடன், நிதிஷ்குமார் கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார்.
அதையடுத்து, பா.ஜனதா கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். அதில், சட்டசபை கூட்டணி தலைவராக (முதல்-மந்திரி) நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர், கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரப்படும்.
நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவை 19-ந் தேதி அல்லது 20-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பணிகளை பொறுத்து, தேதி இறுதி செய்யப்படும்.
பாட்னா காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நிதிஷ்குமார் 10-வது தடவையாக முதல்-மந்திரி பதவியை ஏற்கிறார்.
பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜனதா கூட்டணி முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
Hindusthan Samachar / JANAKI RAM