Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று
(நவ 17) மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது,
நேற்று (நவ 16) காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் 4; கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நீடிக்கிறது.இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும்.
அதனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் இன்று(நவ 17) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு, வடக்கு மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கான ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கன மழை பெய்யும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான முதல் கன மழையும் பெய்யக் கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b