Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 17 நவம்பர் (ஹி.ச.)
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் மற்றும் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு, எஸ்ஐஆர் குறித்தும், தேர்தல் நேரத்தில் பூத் ஏஜெண்டுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தால் (SIR) மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த எஸ்ஐஆரில் மறைமுக என் ஆர்சி (National Register of Citizens - NRC) நடத்துகிறார்கள்.
எதற்காக தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிறது? SIR படிவங்களை பார்த்தாலே மக்கள் அஞ்சுகின்றனர்.
எனவே, இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளோம்.
SIR மூலம் வெளிமாநிலத்தவர்களின் வாக்குகளை இங்கு சேர்ப்பதற்கு முயற்சி செய்வார்கள்.
தகுதியற்ற வாக்குகளை சேர்ப்பதற்கும், தகுதியான வாக்குகளை நீக்குவதற்கும் அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக, சிறுபான்மையின மக்கள், பட்டியலின மக்கள், ஓபிசி (OBC), எம்பிசி( MBC) வாக்குகளை எடுப்பதற்கு அனுமதிக்கக் கூடாது, என்றார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் அங்கே ஓட்டுபோடும் நிலையில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வாக்கு செலுத்துவதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தமிழ்நாட்டில் இருந்து மும்பை தாராவி மற்றும் டெல்லிக்கு சென்றவர்கள் பல தலைமுறைகளாக அங்கு வசித்து வருகின்றனர். அவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள்.
இங்கு வரவேமாட்டார்கள.
அதேபோல், தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக உள்ள சீக்கியர்கள், பௌத்த சமயத்தவர்களுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால், தற்போது இடையில் தொழிலாளர்கள் என்ற போர்வையில் வாக்காளர்களைச் சேர்ப்பதற்குதான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். 2005-இல் எடுக்கப்பட்ட SIR படிவங்கள் ஏன் தேர்தல் ஆணைய வலைத்தளத்தில் இல்லை? தேர்தல் வரும் இந்த நிலையில், எஸ்ஐஆர் பணிகளை தற்போது மேற்கொள்வதற்கு என்ன அவசரம்? என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
2026 தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு,
தேசிய கட்சியில் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தான் முடிவு எடுப்பார்கள்.
மேலும், பிரவீன் சக்கரவர்த்தி தவெகவுடன் பேசினேன் என்று சொல்லவில்லை. அப்படியே இருந்தாலும், அவருக்கு கூட்டணி குறித்து விவாதிப்பதற்கான அதிகாரம் இல்லை.
இந்தியா கூட்டணி வலுவாகத்தான் உள்ளது. பீகார் தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால் தமிழக காங்கிரஸுக்கு எந்த பாதகமும் இல்லை.
தேர்தலில் திமுக வெற்றி பெறுகிறது என்றால் அதில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளும் உள்ளன.
திமுக வலிமையாக இருந்தாலும் நாங்கள் வாங்கும் வாக்குகளையும் வைத்து தான் திமுக வெற்றி பெறுகிறது.
கூட்டணி என்பது, ஒண்ணும் ஒண்ணும் இரண்டல்ல ஒண்ணும் ஒண்ணும் பதினொன்று என்று செல்வப்பெருந்தகை புது கணக்கு கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN