Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆா் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, வீடு வீடாக கணக்கீட்டு விண்ணப்பங்களை விநியோகித்து, அவற்றைப் பூா்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தமிழகத்தில் மட்டும் கிட்டத்திட்ட 6 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகளில் நாளை (நவ 18) முதல் ஈடுபடப் போவதில்லை என வருவாய்த்துறை சங்கங்களுடைய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கான காரணங்களாக வருவாய்த்துறை சங்கங்களுடைய கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில்,
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முழுமையாக பிழைகள் இன்றி மேற்கொள்ளக் கூடுதல் பணியாளர்கள் நியமன வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் நள்ளிரவு வரை கூட்டங்கள் நடத்துகின்றனர். தினமும் காணொளி வாயிலாக மூன்று கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இவற்றால் எங்களுக்கு பணிச்சுமை அதிகம் ஏற்பட்டுள்ளது.
எங்களை துன்புறுத்துவதை போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாட்களிலும் கூட திருத்தப் பணிகளில் ஈடுபட வேண்டும் என அரசுப் பணியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. கடுமையான பணிச்சுமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அவர்களுக்கு மேலே உள்ள கண்காணிப்பாளர்கள் பணிபுரிகின்றனர்.
அனைத்து நிலை அலுவலர்களுக்கும் இருக்கும் கூடுதலான பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக கணக்கிட்டு வழங்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் உள்ளோம். நாளை முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம் .
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b