டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிரவாதியின் 2 செல்போன்களை தேடும் பணி தீவிரம்
புதுடெல்லி, 17 நவம்பர் (ஹி.ச.) டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய உமர் முகமது நடமாட்டம் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. இதனை தொடர்ந்து அவர் கடைசி 36 மணி நேரங்களில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்த தகவல்கள
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிரவாதியின் 2 செல்போன்களை தேடும் பணி தீவிரம்


புதுடெல்லி, 17 நவம்பர் (ஹி.ச.)

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய உமர் முகமது நடமாட்டம் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.

இதனை தொடர்ந்து அவர் கடைசி 36 மணி நேரங்களில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்த தகவல்களை போலீசார் மற்றும் புலனாய்வுத்துறையினர் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு அரியானாவில் உள்ள ஒரு கேமராவில் உமர் முகமதுவின் நடமாட்டம் பதிவாகியிருந்தது.

அவர் பணியாற்றிய பல்கலைக்கழகத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மருந்து கடையில் உமர் முகமது 2 செல்போன்களை கைகளில் வைத்துள்ளார். ஒன்றை மருந்து கடை உரிமையாளரிடம் சார்ஜ் போட கொடுக்கிறார். மற்றொன்று கையில் வைத்துள்ளார்.

இந்த காட்சிகளை தொடர்ந்து அவருடைய நடமாட்டங்களை கண்காணிப்பு கேமரா மூலம் சேகரித்தனர். 65-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் அவருடைய நடமாட்டம் பதிவாகி இருந்தது.

குண்டுவெடிப்புக்கு முன்பு அவர் 3 மணி நேரத்திற்கு மேலாக செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் தங்கி உள்ளார். அதில் அவர் பயன்படுத்திய செல்போன்கள் எதுவும் கையில் இல்லை.

மேலும் அங்குள்ள மசூதிக்குள் சென்று முகமூடியை கழற்றி விட்டு தனியாக 15 நிமிடங்கள் இருந்துள்ளார். அப்போதும் அவர் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. அவர் கையில் வேறு எதையும் வைத்திருக்கவில்லை.

இதன் மூலம் தாக்குதலுக்கு முன்பு உமர் முகமது தான் பயன்படுத்திய 2 செல்போன்களையும் வேறு யாரிடமாவது கொடுத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அவருடைய நெருங்கிய கூட்டாளியான டாக்டர் முசம்மில் ஷகீல் கனாய் கைது செய்யப்பட்ட அதே நாளில் தன்னுடைய செல்போன் எண்கள் இரண்டையும் உமர் முகமது செயலழிக்க வைத்துள்ளார்.

அதற்கு பிறகு அவர் புதிய சிம்கார்டுகளை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

உமர் முகமது ஒரு செல்போனை தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்காகவும் மற்றொன்றை தாக்குதல் பற்றிய தீவிரவாத கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொள்ள பயன்படுத்தி இருக்கலாம்.

அந்த 2 செல்போன்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த செல்போன் கண்டு பிடிக்கப்பட்டால் இந்த திட்டத்தில் உள்ள தீவிரவாத கும்பல் குறித்த தகவல்கள், உமர் முகமதுவுக்கு நிதி உதவி அளித்தவர்கள் யார் என்ற தகவல்களும் வெளிவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / JANAKI RAM