Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 17 நவம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 88.52 ஏக்கர் பரப்பில், புதிய பேருந்து முனையம் 2023 டிசம்பரில் திறக்கப்பட்டது. இதையடுத்து, பேருந்து பயணியர் கோரிக்கையை ஏற்று, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது.
அதன்படி, வண்டலுார் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகளை, ரயில்வே நிர்வாகம், 2024 மார்ச் மாதம் துவக்கியது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும், பேருந்து முனையத்தையும் நேரடியாக இணைக்கும்படி, 280 மீ., நீளத்தில், கூரையுடன் கூடிய உயர்மட்ட நடைபாலம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
தொடர்ந்து, உயர்மட்ட நடைபாதை அமைக்க, 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகளை சி.எம்.டி.ஏ., நிர்வாகம், 2024 நவம்பரில் துவக்கியது.
இந்நிலையில், உயர்மட்ட நடைபாலம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலத்திற்கு, சந்தை மதிப்பில் இழப்பீட்டு தொகை கோரப்பட்டதால், அந்த பணிகளில் சுணக்கம் நிலவியது. பின், பிரச்னைகள் தீர்க்கப்பட்ட நிலையில், உயர்மட்ட நடைபாலம் அமைக்கும் பணிகள், கடந்த செப்., மாதம் முடுக்கிவிடப்பட்டன.
இதையடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முன், ஜி.எஸ்.டி., சாலையின் குறுக்கே, உயர்மட்ட நடைபாலத்திற்கான கட்டமைப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது ஜி.எஸ்.டி. சாலையின் ஒரு பாதியில், நடைபாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளில் கான்கிரீட் சட்டங்கள், மின் விளக்குகள், கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடையும்.
அதைத் தொடர்ந்து, ஜி.எஸ்.டி., சாலையின் மறு பாதியில் உள்ள பணிகள், டிச., முதல் வாரம் துவக்கப்பட உள்ளன. ஒட்டுமொத்த நடைமேம்பால பணிகளையும், 2026,
ஜன.15-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b