Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 17 நவம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதைத்தொடர்ந்து, 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் 3ம் தேதி மாலை ஏற்றப்படும். அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2,688அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில், தீப விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் அதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருக்கோயில் பராமரிப்பு, பஞ்ச ரதங்கள் சீரமைப்பு பணி செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அம்மன் தேர் முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு கடந்த 14-ம் தேதி வெள்ளோட்டம் நடைபெற்றது. தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும் 10 நாட்களும் சுவாமி புறப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தையும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதனன் இன்று(நவ 17) காலை ஆய்வு செய்தார்.
பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் மாட வீதிகளையும் ஆய்வு செய்தார்.
தேரோட்டத்தின்போது பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதனன் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Hindusthan Samachar / vidya.b