திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாலைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்தால் கடை அகற்றப்படும் - காவல்துறையினர் எச்சரிக்கை
திருவண்ணாமலை, 17 நவம்பர் (ஹி.ச.) பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருத்தலமாகவும் விலகக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 24 ஆம் தேதி கொடியேற்றத்
Girivala Pathai


திருவண்ணாமலை, 17 நவம்பர் (ஹி.ச.)

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருத்தலமாகவும் விலகக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர விழாவாக வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணி அளவில் 2668 அடி உயரம் கொண்ட மகா தீப மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும், தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டுமின்றி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து தீப தரிசனம் செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

அருணாச்சலேஸ்வரர் கோவிலின் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர், நடைபாதையில் இளநீர் கடை, டீ, டிபன், கூல்ட்ரிங்ஸ், பழக்கடை, டீக்கடை கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வியாபாரங்களை நடைபாதையில் வைத்து அவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் அன்பரசு, விஜயபாஸ்கரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து கிரிவலப் பாதையில் உள்ள விஜி திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் காவல்துறை சார்பில் 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலத்திற்கு வருகை தர உள்ளதால் நடைபாதை வியாபாரிகள் அனைவரும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைக்காமல் காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

தொடர்ந்து நாளை 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளையும் நெடுஞ்சாலை துறை அதிகாரி இணைந்து அகற்றப்படும் என வியாபாரிகளுக்கு காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்தனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நடைபாதை வியாபாரிகள் நாங்கள் கார்த்திகை தீபம் மற்றும் சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட இரு தினங்களில் மட்டுமே பெரிய அளவில் வியாபாரம் செய்ய முடியும் என்றும், தங்களை இது போன்ற நாட்களில் வியாபாரம் செய்யக்கூடாது என நெருக்கடி கொடுத்தால் தாங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ஆகவே நடைபாதையில் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டால் கட்டாயம் அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN