Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)
விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவுநாளையொட்டி நாளை (நவ 18) தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெருமக்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை தியாகத் திருநாள் எனக் கடைப்பிடிக்குமாறு 3.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்கள். அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு நாளான இந்த ஆண்டின் தியாகத் திருநாள் 18.11.2025 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள்.
செக்கிழுத்த தியாகச் செம்மல் ! கப்பலோட்டிய தமிழன்! வ.உ.சிதம்பரனார் , தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 5.9.1872 அன்று மகனாகப் பிறந்தார்கள்.
ஒட்டப்பிடாரத்தில் அடிப்படைக் கல்வியையும், தூத்துக்குடியில் உயர்நிலைக் கல்வியையும், சட்டக் கல்வியைத் திருச்சியிலும் பயின்று வழக்குரைஞப் ஆனார்கள். வ.உ.சிதம்பரனார் சமூக சேவையிலும் அரசியல் பணியிலும் படிப்படியாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழ்நாட்டிலிருந்து பாடுபட்ட தலைவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார்.
அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தமது குருவாக ஏற்றுக் கொண்டு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்திடப் பாடுபட்டார். ஆங்கிலேயரின் கப்பல் வாணிகத்தை முறியடித்திட அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும், தூத்துக்குடியில் சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் எனப் பெயர் பெற்றார். வ.உசிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள். அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காகப் பொதுமக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்கள்.
இதன் காரணமாக, 1908ஆம் ஆண்டு கோவை சிறையில் அடைத்தும் வ.உ.சி அவர்களைச் செக்கிழுக்க வைத்தார்கள்.
தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தாய்மொழியான தமிழ்மொழி மீது கொண்டிருந்த தணியாத பற்றின் காரணமாக பல அரிய நூல்களைப் படைத்தார். சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதினார். திருக்குறளுக்கு உரை எழுதினார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார்.
கலைஞர் தூத்துக்குடியில் வ.உ.சிக்குச் சிலை நிறுவி 5.9.1972 அன்று பிரதமர் இந்திரா காந்தியை அழைத்துத் திறந்து வைத்தார்கள். அப்போது, கலைஞர் பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளின்படி, 1975 முதல் 1976 வரை தூத்துக்குடியில் கட்டிமுடிக்கப்பட்ட 4 கப்பல் தளங்களுக்கு ஒன்றிய அரசினால் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. 1998ஆம் ஆண்டு கலைஞரால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய 16 நூல்களும் அரசுடைமையாக்கப்பட்டன.
முதலமைச்சர். 3.9.2021 அன்று சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, நம் தேசத்தின் விடுதலைக்காகத் தம்மையே அர்ப்பணித்தும் அயராது பாடுபட்டும், தாய் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து, மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்தும் வாழ்கின்ற, கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 89வது நினைவு நாளான நவம்பர் 18 அன்று தியாகத் திருநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டுப் போற்றப்படுகிறது.
இந்த ஆண்டின் தியாகத் திருநாள் நிகழ்ச்சியில், மேயர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். அமைச்சர் பெருமக்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b