Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 நவம்பர் (ஹி.ச.)
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராடி வருகிறது.
ஆனால், அவற்றை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, தலைமை செயலக சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் உட்பட, பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இதேபோல, எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவ வினியோக பணியை புறக்கணிக்கப் போவதாக, வருவாய் துறை அலுவலர்கள் சங்கமும் அறிவித்துள்ளது.இதனால், இன்று அரசு பணிகள் மட்டுமின்றி, எஸ்.ஐ.ஆர்., பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால், ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்; துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என, தலைமை செயலர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அனைத்து துறைகளின் செயலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
குறிப்பிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று
(நவ.18-ம் தேதி) நடைபெறம் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குறிப்பிட்ட சில அரசு ஊழியர் சங்கத்தினர் பங்கேற்க திட்டமிட்டிருப்பதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது.
அரசு அலுவலகங்களின் அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்படும் வகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலோ அல்லது போராட்டத்திலோ ஈடுபடுவது தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிமுறையை மீறும் செயல் ஆகும். எனவே, நவ.18-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு ஒருநாள் சம்பளம் வழங்கப்படாது.
நவ.18 அன்று எந்த அரசு ஊழியருக்கும் மருத்துவ விடுப்பு தவிர தற்செயல் விடுப்பு எதுவும் வழங்கப்படக்கூடாது. அனைத்து துறைகளின் செயலர்களும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்குள் ஊழியர் வருகைப்பதிவு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
அதன் நகலை மனிதவள மேலாண்மைத்துறைக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும்.
அதேபோல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் நிர்வாக வரம்புக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் ஊழியர் வருகைப்பதிவு விவரத்தை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் வாயிலாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
அதன் நகலை மனித வள மேலாண்மைத்துறைக்கு தவறாமல் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b