Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 நவம்பர் (ஹி.ச.)
சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண சென்னையில் இன்று முதல் 25-ந்தேதி வரையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2026 பொதுத்தேர்தலுக்கான சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் சென்னை மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை பெற்று வருகின்றனர். கணக்கீட்டுப்படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணவும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 25-ந்தேதி வரை 8 நாட்களுக்கு 947 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும்.
வாக்காளர் உதவி மையங்களில் சம்பந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுடன் ஒருவர் துணையாக வரலாம். இந்த உதவி மையங்களில் கணக்கீட்டு படிவங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள், வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
இப்பணிகளை வெற்றிகரமாக செய்துமுடிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கு இன்றியமையாதது. இந்திய தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதலின்படி, அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை பெற்று வழங்க அனுமதித்துள்ளது.
அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும்போது அதற்கான உறுதிமொழியை இணைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM