Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 18 நவம்பர் (ஹி.ச.)
காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற பகுதியில் ரூ.14 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது.
இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க கோரிய தமிழகத்தின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் இந்த திட்டத்திற்கான விரிவான அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதனால் இது தங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதும் கர்நாடக அரசு, மேகதாது திட்ட பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த பணிகளை தொடங்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் தேவை. இந்த ஒப்புதலை பெற கர்நாடக அரசு மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தில், மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தனி அலுவலகத்தை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.
மேலும் அணை அமைக்கப்படுவதால் அதற்கான நிலத்தை கையகப்படுத்தும் ஆயத்த பணிகளையும் கர்நாடக அரசு தொடங்கிவிட்டது.
அதே நேரத்தில் எக்காரணம் கொண்டும் மேகதாது திட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்று தமிழக அரசு உறுதிப்பட கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பிரதமர் மோடியை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது மேகதாது திட்டத்துக்கு உடனே அனுமதி அளிக்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM