மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணி தொடர்வதால் இந்தியாவை விட்டு வங்கதேசம் திரும்ப முயன்ற ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது
மேற்கு வங்கம்,19 நவம்பர் (ஹி.ச.) நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மத்திய அரசு வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. மேற்கு வங்கத்தில் ''எஸ்ஐஆர்'' பணிகள் தொடங்கியதன் முக்கிய பலனை பார்க்க முடிகிறது. அங்கு வீடு, வீடாக '
மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணி தொடர்வதால் இந்தியாவை விட்டு வங்கதேசம் திரும்ப முயன்ற ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது


மேற்கு வங்கம்,19 நவம்பர் (ஹி.ச.)

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மத்திய அரசு வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேற்கு வங்கத்தில் 'எஸ்ஐஆர்' பணிகள் தொடங்கியதன் முக்கிய பலனை பார்க்க முடிகிறது. அங்கு வீடு, வீடாக 'எஸ்ஐஆர்' கணக்கீட்டு விண்ணப்ப படிவங்களை வினியோகித்து, பூர்த்தி செய்து அவற்றை திரும்ப பெறும் பணிகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதன் எதிரொலியாக, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் சட்ட விரோதமாக ஊருடுவி உள்ள ஏராளமானோர் தற்போது சொந்த நாடு நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு செல்வோரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து கைது செய்து வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள ஹக்கிம்பூர் சந்தையில், வங்கதேசத்தினர் நாடு திரும்ப காத்திருந்தனர். அவர்களில் 300 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வங்கதேசப் பெண் சபீனா பர்வின் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளாக நான் இங்கு தங்கி வீட்டு வேலை செய்து, பணம் சம்பாதித்து என் வாழ்க்கையை நடத்தி வந்தேன். வங்கதேசத்தில் எனக்கு வேலை கிடைக்கவில்லை. வேலையைத் தேடி இந்தியாவுக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வாழ்வாதாரத்தைத் தேடி இங்கு வந்த ஏழை மக்கள் எங்களிடம் அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது. இது எங்களை கவலையடையச் செய்துள்ளது, வங்கதேசத்தில் மீண்டும் கஷ்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், நாங்கள் வீடு திரும்ப முடிவு செய்தோம். அதனால் எல்லையில் குவிந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கதேச நாட்டை சேர்ந்த அப்சர் கான் கூறுகையில்,

'இந்தியாவில் தங்குவதற்கு என்னிடம் சட்டப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை. நான் சட்டவிரோதமாக வசித்து வந்தேன், ஆனால் இப்போது இந்தியாவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் நான் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

என்றார்.

Hindusthan Samachar / JANAKI RAM