Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 19 நவம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது நாளிலேயே படுதோல்வி அடைந்தது.
தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன் இலக்கை கூட துரத்த முடியாமல் இந்திய அணி 35 ஓவர்களில் வெறும் 93 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 22-ம் தேதி கவுகாத்தியில் தொடங்க உள்ளது. தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான வலியால் பாதியில் வெளியேறிய இந்திய கேப்டன் சுப்மன் கில் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அத்துடன் அந்த போட்டியிலிருந்து விலகினார். இதனால் அவர் 2-வது இன்னிங்சில் பேட் செய்யவில்லை. தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் அவர் 2-வது போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் கூடுதல் வீரராக நட்சத்திர ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, தென் ஆப்பிரிக்கா ஏ - இந்தியா ஏ இடையிலான ஒருநாள் தொடரில் பங்கேற்க விடுவிக்கப்பட்டார். தற்போது மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM