Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவாக்கினார்.
பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்ட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி வந்த பின் செம்மொழிப் பூங்கா திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் தொடங்கின.
இதன் ஒரு பகுதியாக கோவையில் செம்மொழிப் பூங்கா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாக பகுதியில் 165 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதில் 45 ஏக்கர் பரப்பில் முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிக்காக முதலில் ரூ.167.25 கோடி, தற்போது கூடுதலாக ரூ.47 கோடி என மொத்தம் ரூ 214.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பூங்கா முகப்பில் செயற்கை மலைக்குன்றுகள், அதில் நீர் வீழ்ச்சி, வன விலங்குகள் நடமாடுவது போன்றும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.செம்மொழி பூங்காவில் 100 வகையான வண்ண வண்ண ரோஜாக்களுக்கு வரிசையாக 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் செம்மொழிவனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நலம் தரும் வனம், நறுமண வனம் என 23 விதவிதமான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர மக்களின் பொழுதுபோக்கு மையமாக விளங்க உள்ள செம்மொழி பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பூங்காவின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு 26-ந் தேதிக்கு பதிலாக ஒரு நாள் முன்கூட்டியே 25-ந் தேதி செம்மொழி பூங்கா திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனவே பூங்காவில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
Hindusthan Samachar / vidya.b