Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 19 நவம்பர் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகிறார். இதனை முன்னிட்டு நகரம் முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்பகுதியாக, போலீசார் இன்று காலை விரிவான பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர்.
தென் இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள இயற்கை விவசாயிகள் மாநாடு இன்று துவங்கி மூன்று நாள் நடைபெற உள்ள இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
தனி விமானத்தில் புறப்படும் பிரதமர், மதியம் 1.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பரிசீலிக்க மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு பாதுகாப்பு பணிகள், வழித்தடங்கள், பொதுமக்கள் நடமாட்டம் உள்ளிட்ட விடயங்களை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, விமான நிலையத்திலிருந்து கொடிசியா வளாகம் வரை பிரதமரின் கான்வாய் செல்லும் வழித்தடத்தில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கியுடன் கூடிய போலீசார் இருபுறமும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு நிலையைச் சோதித்தனர்.
ஒத்திகை காரணமாக அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கமைப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan