Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.)
வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்பு கூட்டு மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்களுக்கு ரூ.1.50 கோடி வரை மானியம் பெறலாம்.
வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வேளாண் விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், ரூ.10 கோடி வரையிலான மதிப்புக்கூட்டுதல் திட்டங்களுக்கு பொது பிரிவினருக்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், பெண்கள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொடங்கப்படும் தொழில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் ஆக மொத்தம் 35 சதவீதம் என அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இது தவிர அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள வேளாண் தொழில்முனைவோர்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வங்கியில் கடன் ஒப்புதல் பெற்றபின், மானியம் பெறுவதற்கான அவர்களுடைய விண்ணப்பங்கள் மாவட்ட தொழில்நுட்பக்குழு மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு அவர்களின் தொழில் திட்டத்திற்கேற்ப மானியத்தொகை அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வரை ஒரே தவணையாக வழங்கப்படும்.
மேலும் 5 ஆண்டுகளுக்கு 5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுவதுடன் கூடுதலாக வேளாண் கட்டமைப்பு நிதி திட்டத்தில் 3 சதவீத வட்டி மானியமும் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b