Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 19 நவம்பர் (ஹி.ச.)
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று கோவை வருகிறார்.
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ள தென்னிந்தியா இயற்கை வேளாண் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமான மூலம் இன்று கோவை விமான நிலையத்துக்கு மோடி வருகிறார்.
இங்கு அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் அவர் இங்கு இருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்திற்கு பிற்பகல் 1:30 மணிக்கு செல்கிறார்.
அங்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதை அடுத்து பிரதமர் மோடி இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்து ஆண்டுக்கு ரூபாய் 6,000 உதவித்தொகை வழங்கும் பி எம் கிசான் திட்டத்தில் 21 வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 18,000 கோடி உதவி தொகையை வழங்கி பேசுகிறார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்தி 24 விவசாயிகள் பயன் அடைகின்றனர்.
இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 44 ஆயிரத்தி 837 பேர் பயனடைவார்கள்.
விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார்.
அதன் பிறகு இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
அதைத்தொடர்ந்து அவர் இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை பார்வையிடுகிறார்.
இந்த நிகழ்ச்சிகள் முடித்துக் கொண்டு பிற்பகல் 3:30 மணிக்கு கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி இங்கு இருந்து விமான மூலம் டெல்லி செல்கிறார்.
இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இயற்கை விவசாயிகள் கலந்து கொள்கின்றார்கள்.
மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் பிரதமரின் தனி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மாநாடு நடைபெறும் பகுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோவை அவிநாசி சாலையில் இருந்து கொடிசியா வளாகம் வரை போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி வருகை தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தமிழகம் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவா சீர்வாதம் நேற்று காலை கோவை வந்தார்.
அவர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில் காவல் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து கொடிசியா வளாகம் வரை பிரதமர் மோடியின் கார் செல்லும் பகுதிகளில் நேற்று மாலையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
பிரதமர் தனி பிரிவு பாதுகாப்பு படையினர் மற்றும் கோவை மாநகர போலீசார் இணைந்து ஒத்திகை நடத்தினர்.
அப்பொழுது பிரதமர் கார் செல்லும் போது பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய, அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அனைத்து உழவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் கூட்டமைப்பு தலைவர் வாழை கருப்பையா, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க தலைவர் ஜி.கே வாசன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள்.
Hindusthan Samachar / V.srini Vasan