Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.)
சென்னையில் இரண்டாவது கட்டமாக மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் மாதவரத்தில் இருந்து பெரம்பூர், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், அடையாறு, சோழிங்கநல்லுார் வழியாக சிறுசேரி செல்கிறது.
இரண்டு வழித்தடங்களில் இணையும் சோழிங்கநல்லுார் முக்கிய சந்திப்பாக அமைகிறது. இதனால், இங்கு பிரமாண்டமாக மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறியதாவது:
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், சோழிங்கநல்லுார் முக்கியமான மெட்ரோ ரயில் நிலையமாக இருக்கும். ஓ.எம்.ஆர் - இ.சி.ஆர்., பகுதிகளில், ஐ.டி., உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் இருப்பதால், பயணியருக்கான அடிப்படை வசதிகளுடன், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு சிறப்பு அம்சங்களும் இடம் பெறும்.
இரண்டு வழித்தடங்களுக்கு மாறி செல்ல போதிய அளவில் நகரும்படிகள், மின்துாக்கி உள்ளிட்டவையும் அமைக்கப்படும்.
இந்த மெட்ரோ நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில், எட்டு மாடி கட்டடம் கட்டப்படும். இந்த கட்டடத்தையும், மெட்ரோ நிலையத்தையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டப்படும்.
பிரமாண்ட வாகன நிறுத்தம், மெட்ரோ ரயில்களுக்கான நடைமேடைகள், தனியார் அலுவலகங்களுக்கான இடம் உள்ளிட்டவை இடம்பெறும். கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் போன்ற, ஒரு சிறிய ஓய்வு மற்றும் செயல்பாட்டு மையமும் இடம் பெறும்.
இது பயணியருக்கு ஒரு பொழுதுபோக்கு இடமாக அமையும். ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில், பயணியர் இங்கு ஓய்வெடுக்கலாம்.
சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களுடன், வணிக வளாகம், பொழுதுபோக்கு அம்சங்கள் என, 400 கோடி ரூபாய் வரை செலவாகும்.
சோழிங்கநல்லுாரில் தற்போது நடந்து வரும் பணிகள் அனைத்தையும், 2027ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இங்கு மெட்ரோ ரயில் சேவை துவங்கும்போது, பயணியர் புது அனுபவத்தை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b