Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.)
கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்குத் தனி பாதுகாப்பு திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என்று தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயளாலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று (நவ 19) கூறியிருப்பதாவது,
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், காதலிக்க மறுத்ததன் பேரில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
பள்ளிக்கு செல்லும் மாணவிகள், கல்லூரி பயிலும் மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் என எல்லா தரப்பு பெண்களின் பாதுகாப்பும் இன்று தமிழ்நாட்டில் கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஒவ்வொரு நாளையும் அச்சத்திலேயே எதிர்கொள்ளும் நிலைக்கு தமிழக பெண்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் கோவையில் கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் நாம் மீளவில்லை.
இந்நிலையில், பொதுவெளியில் பெண்கள் எங்கும் சுதந்திரமாக சென்று வர முடியாத அளவிற்கு இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிரள வைக்கின்றன.
மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாடு, சர்வ சாதாரணமாக மாறியுள்ள ஆயுத கலாசாரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் சட்டம் ஒழுங்கின் தோல்வியாகவே இதைப் பார்க்கவேண்டியுள்ளது.
இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு சட்டத்தின் முன் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்குத் தனி பாதுகாப்பு திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b