தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பது குறித்த விவரங்களை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் - தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம்
சென்னை, 19 நவம்பர் (ஹி.ச) தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பது குறித்த விவரங்களை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழ
Aanaiyam


சென்னை, 19 நவம்பர் (ஹி.ச)

தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பது குறித்த விவரங்களை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதித்யசோழன், தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்குகளின் விவரங்களை வழங்கக் கோரி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விண்ணப்பித்திருந்தார்.

இந்த தகவல்கள் வழங்கப்படாததை அடுத்து, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதன் மீது முடிவெடுக்கப்படாததால், ஆதித்ய சோழன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் விண்ணப்பம் மீது 12 வாரங்களில் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், மாநில தகவல் ஆணையர் ஷகீல் அக்தர், மனு மீது விசாரணை நடத்தினார். விசாரணையின் போது, மனுதாரர் கோரிய விவரங்களை வழங்க முடியாது என விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த தகவல் ஆணையம், ஒரு மாதத்தில் மனுதாரர் கோரிய தகவல்களை வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ