Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 19 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருந்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனியப்பனை, போலீஸார் வீட்டுக்காவலில் சிறை வைத்துள்ளனர்.
கோவை கொடீசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய வேளாண் மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைக்க கோவைக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி.
இதனை முன்னிட்டு, அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்தே விவசாயிகளுக்கு விரோதமான போக்கையே கடைப்பிடித்து வருகிறார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம் என்று கூறும் பிரதமர் மோடி திருத்தப்பட்ட மரபணு விதையை விவசாயத்தில் புகுத்தி வருகிறார்.
இது முற்றிலும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு சீர்கேடாகும். மேலும், நெல் கொள்முதலில் ஆண்டுதோறும் 22 சதவீத ஈரப்பதத்தை அனுமதிக்க கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ஆனால் மத்திய குழு வருவதும், போவதும் மட்டுமாகவே இருக்கிறதே தவிர 22 சதவீத ஈரப்பத கொள்முதல் நடப்பதே இல்லை.
மேகேதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு அனுமதி அளித்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையீடு உள்ளது. இதைக் கண்டித்து கோவையில் நடைபெறும் வேளாண் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டு இருந்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனியப்பனை தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டில் தமிழ்ப்பல்கலைக்கழக காவல் ஆய்வாளர் (பொறுப்பு) முத்துக்குமார் தலைமையிலான போலீஸார் 7 பேர் வீட்டுக்காவலில் சிறைப்படுத்தி உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN