Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 19 நவம்பர் (ஹி.ச.)
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, கோவை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது,
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு புறக்கணித்து, திட்ட அறிக்கை திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. 2011ஆம் ஆண்டில் மத்திய அரசு 21 நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தது.
அதில் 16வது இடத்தில் கோவை இருந்தது. கோவைக்கு பின்னால் இருந்த கொச்சி, பட்னா ஆகிய மெட்ரோ ரயில் திட்டம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் அந்த நகரங்களை விட மக்கள் தொகை அதிகமுள்ள கோவையில் இத்திட்டம் அமல்படுத்தவில்லை. மக்கள் தொகையை காரணம் காட்டி, கோவைக்கு மெட்ரோ திட்டம் புறக்கணிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கோவையை விட மக்கள் தொகை குறைவாக உள்ள ஆக்ரா, போபால் ஆகிய நகரங்களில் மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் மோடி அரசு தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது.
இந்த நிலையில் கோவைக்கு பிரதமர் மோடி வருகையை கண்டிக்கிறோம். பிரதமர் மோடி கோவை, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan