இந்த ஆண்டு திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு முதல் 3 நாட்கள் ஆன்லைன் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி
திருமலை, 19 நவம்பர் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதேசி தரிசன டிக்கெட் கவுண்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி தரிசனத்தில் இது போன்ற அசம
இந்த ஆண்டு திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு முதல் 3 நாட்கள் ஆன்லைன் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி


திருமலை, 19 நவம்பர் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதேசி தரிசன டிக்கெட் கவுண்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியானார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி தரிசனத்தில் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருகிற 30-ந் தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது. வைகுண்ட துவார தரிசனத்தின் முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

மீதமுள்ள 7 நாட்களுக்கு வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டோக்கன் நேரடியாக வழங்கப்படும் பக்தர்கள் நேரடியாக திருமலையை அடைந்து வைகுண்ட துவார தரிசனம் செய்யலாம்.

இந்த 10 நாட்களில் சுமார் 8 லட்சம் பேருக்கு தரிசனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 4,300 முதல் 4,700 பேர் வரை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை முதல் 3 நாட்கள் தரிசனத்திற்கான டோக்கன்களுக்கு பக்தர்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தேவஸ்தான வலைத்தளம், மொபைல் செயலி மற்றும் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம்.

டிசம்பர் 2-ந்தேதி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்வதற்கு முதல் 3 நாட்களில் ஆன்லைன் டோக்கன் இல்லாத பக்தர்கள் திருப்பதி மலைக்கு நேரடியாக வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM