Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 நவம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் ஆளும் பாஜக அரசு வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும் இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமீப காலமாக தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்து உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த 16 முன்னாள் நீதிபதிகள், 123 முன்னாள் அரசு உயர் அதிகாரிகள், 14 முன்னாள் தூதர்கள் மற்றும் 123 முன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என மொத்தம் 272 பேர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், இந்திய ஜனநாயகம் சமீப காலமாகத் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும், அரசு நிறுவனங்களுக்கு எதிராக விஷமத்தனமான செயல்பாடுகள் அதிகரித்திருப்பது குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது,
ஓட்டு திருட்டு குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதன்மூலம், தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்புகள் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்க முயற்சிகள் நடக்கின்றன.
தேர்தல் ஆணையத்தை ராகுல் காந்தி பலமுறை தாக்குவதோடு, வாக்குத் திருட்டில் ஈடுபடுபவர்களை விட மாட்டேன் என மிரட்டலும் விடுக்கிறார். தேர்தல் தோல்வி விரக்தியில் இதுபோன்று செயல்படுவதை விடுத்து, ஜனநாயகத் தீர்ப்புகளை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் முரண்பாடுகள் கவலைக்குரியவை. குறிப்பாக, தங்களுக்குச் சாதகமாக முடிவுகள் வரும் மாநிலங்களில் அமைதியாக இருந்துவிட்டு, பாதகமாக முடிவுகள் வந்தால் தேர்தல் ஆணையத்தை வில்லனாகச் சித்தரிக்கிறார்கள்.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது போல், இந்தியாவும் அதன் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்.
என்று கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த அறிக்கையில் 16 நீதிபதிகள், 123 ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் 133 ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b