பூட்டிய வீட்டை உடைத்து 12 சவரன் தங்க நகை கொள்ளை
புதுக்கோட்டை, 20 நவம்பர் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கண்ணகி நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் ஓய்வு பெட்ரா சர்வேயர் ஆவார். இவரது மனைவி சியாமளா வடகாடு சாத்தன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார்.
பூட்டிய வீட்டை உடைத்து 12 சவரன் தங்க நகை கொள்ளை


புதுக்கோட்டை, 20 நவம்பர் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கண்ணகி நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் ஓய்வு பெட்ரா சர்வேயர் ஆவார். இவரது மனைவி சியாமளா வடகாடு சாத்தன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார்.

இவர்கள் வீட்டின் மாடியில் கொத்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியநாதன் - ஆலங்குடி சர்வேயர் சிந்துஜா தம்பதியர் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இரு குடும்பத்தினரும் வெளியூர் சென்று இன்று (20.11.2025) காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு வீட்டிற்குள் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்துள்ளது. வீட்டில் ஆள் இல்லாதது அறிந்த திருடர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியை சியாமளா வீட்டில் தாலி சங்கிலி உள்பட 12 சவரன் தங்க நகைகளும், கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியநாதன் வீட்டில் ரூ.55 ஆயிரம் பணம், லேப்டாப், செல்போன், பென் டிரைவ்களும் காணாமல் போனது.

அதே போல இதே பகுதியில் உள்ள மரியமதலின் என்பவர் வீட்டிலும் பூட்டை உடைத்து தங்ககம்மல், மற்றும் வெள்ளி பொருட்களும் காணாமல் போனது தெரிய வந்தது. இந்த சம்பவங்கள் குறித்து கொடுத்த புகார்களின் பேரில் ஆலங்குடி போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆலங்குடியில் தொடர் திருட்டு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b