Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 20 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம், சூலூர் அரசு மருத்துவமனையின் தலைமை சிவில் சர்ஜனும் மருத்துவ அலுவலருமான டாக்டர் எம்.ஆர். கஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில்,
போலி மருத்துவம் பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருவர் மீது சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) அலுவலகத்திலிருந்து வந்த தகவலின் பேரில், நேற்று (18.11.2025) காலை 10.30 மணியளவில் டாக்டர் கஜேந்திரன் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் ஜே.கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள “நேஹா கிளினிக்” என்ற பெயரிடப்பட்ட கிளினிக்கிற்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின் போது, கிளினிக்கை நடத்தி வந்த முத்துலட்சுமி என்பவரிடம் மருத்துவப் படிப்பு சான்றிதழ் எதுவும் இல்லை எனத் தெரியவந்தது.
எம்.பி.பி.எஸ்., பி.எச்.டி. உள்ளிட்ட எந்த மருத்துவத் தகுதியும் இல்லாத நிலையில், அவர் பொதுமக்களுக்கு ஊசி போடுவது, மருந்து கொடுப்பது உள்ளிட்ட பொது மருத்துவம் பார்த்து வந்தது உறுதியானது.
கிளினிக்கில் இருந்த ஊசி மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
குழுவில் அலுவலகக் கண்காணிப்பாளர் குமரவேல், அலுவலக உதவியாளர் மணிகண்டன், செவிலியர் மதிராமலட்சுமி மற்றும் ஜே.கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.
போலி மருத்துவம் பார்த்ததாக முத்துலட்சுமி மீது இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் மற்றும் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் சுல்தான்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan