Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR-Special Intersive Revision) கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 4-ஆம் தேதியுடன் இந்த பணிகள் முடிவடைய உள்ளதால், தேர்தல் அலுவலர்கள் SIR படிவங்களை கொடுத்து வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், எஸ்ஐஆர் பணிகளை அவசரகதியில் மேற்கொள்ள நிர்பந்தம் செய்யப்படுவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது SIR புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சி.குமார், அ.பூபதி, குபேரன், எஸ்.ரவி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் எடுக்கப்பட்ட ஒருமனதான முடிவின்படி கடந்த 18 ஆம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் வழங்கப்பட்ட அதிகமான பணி அழுத்தங்களை களைந்திடவும், பணிக்கு உரிய கால அவகாசம் வழங்கிடவும் வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் SIR பணிகள் முழுமையாக புறக்கணிப்பு செய்யப்பட்டது.
இதனால், வருவாய்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, வருவாய் நிருவாக ஆணையர் சாய்குமார் ஆகியோர், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதி அளித்தனர்.
அதேபோல், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து இனி அதீதமான பணி நெருக்கடிகள் தொடராது. அலுவலக நேரம் கடந்தும் விடுமுறை நாட்களில் பணி செய்ய நிர்ப்பந்தம் வழங்கப்படாது. எனவே, SIR பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து, வருவாய் நிர்வாக ஆணையர், கூடுதல் ஆணையர், தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர், தமிழகத்திற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் தற்போது தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் முகாம் பணியில் உள்ளார்.
அவர் சென்னை திரும்பியவுடன் இது குறித்து பேசி ஆணைகள் வழங்குவதாக உறுதியளித்தனர். எனவே, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டனர்.
இதன் அடிப்படையில் அனைத்து மாநில நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்களின் ஆலோசனைக்கு பின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
போராட்டம் தொடங்கிய நேற்று முன்தினமே, வாக்குச்சாவடி அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலருக்கான உயர்த்தப்பட்ட ஊக்கவூதியம் (Remuneration) வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்துவதற்கான அரசாணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவி செய்ய கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவு ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் பணிபார்த்தல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மேலாக அனைத்து மாவட்டங்களிலும் SIR பணிக்கு கூடுதல் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிகமான பணி அழுத்தங்கள் தணிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பணிநெருக்கடிகள் இனியும் வழங்கப்படாது என மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்கள், அரசு செயலாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.
களப்பணிக்கான அவகாசம் 30 நாட்களை உயர்த்திட இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை பெற்று ஆனைகள் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், S.I.R புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, ஆண்டிற்கு 6 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாகவும், சிறப்பு தொகை 2 ஆயிரமும், வாக்குச்சாவடி கண்காணிப்பாளர்களுக்கு ஆண்டிற்கு 12 ஆயிரம் என்பது 18 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN