Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
சென்னை கே.கே.நகர் லட்சுமணசாமி சாலையை சேர்ந்த மகாவீர் என்பவர் எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் நகைக் கடை, பைனான்ஸ் நிறுவனம், மருத்துவஉபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இவரது வீட்டுக்கு நேற்று (நவ 19) காலை 7 மணியளவில் 2 வாகனங்களில் வந்த 6 அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல், சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெருவில் வசித்து வரும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் கலைச்செல்வன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
அம்பத்தூர் திருவேங்கடா நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் பிரகாஷ் என்பவரது வீடு, கோடம்பாக்கம் விஓசி 2-வது தெருவில் உள்ள தனியார் நிறுவனம், கீழ்ப்பாக்கம் வாக்டல்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் இரும்பு வியாபாரி நிர்மல்குமார் வீடு, கே.கே.நகர் முனுசாமி சாலையில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவரின் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
எம்ஜிஆர் நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகம், சவுகார் பேட்டை கந்தப்ப முதலி தெருவில் உள்ள பைனான்ஸ் அதிபர் சுனில், வடபழனி 2-வது மெயின் ரோட்டில் நிதி நிறுவன அதிபர் ராகேஷ் வீடு உட்பட சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக இந்த சோதனை அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் வீடுகளைக் குறிவைத்தே நடந்தது.
சென்னை முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (நவ 20) அதிகாலை வரை விடிய, விடிய சோதனை நடைபெற்றது.
தற்போது சோதனை முடிந்த நிலையில், அங்கிருந்து கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த எந்த தகவலையும் அமாலக்கத் துறையினர் வெளியிடவில்லை.
Hindusthan Samachar / vidya.b