மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தை ஒட்டி குமரிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதால் மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வான
மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தை ஒட்டி குமரிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதால் மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில், 23 செ.மீ., மழை பெய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, 21; காக்காச்சி, 19; மாஞ்சோலை, 18; தென்காசி மாவட்டம் ஆயக்குடி, 14; தென்காசி, 12; செங்கோட்டை, துாத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம், சாத்தான்குளம் பகுதிகளில் தலா, 10 செ.மீ., மழை பெய்துள்ளது.

குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, லட்சத்தீவு, மாலத்தீவு ஒட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது.

இது மேற்கு, வடமேற்கில் மெதுவாக நகரக்கூடும்.தென்கிழக்கு வங்கக் கடலில், நாளை மறுநாள், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இதுவும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் (நவ 20) நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களிலும்,காரைக்காலிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக் கடலில் இன்று சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b