கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
கள்ளக்குறிச்சி, 20 நவம்பர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் வரஞ்சரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவர் கொங்கராயப்பாளையம் பகுதியில் சப்ளையர்ஸ் கடை நடத்தி வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு நாராயணசாமிக்குச்
Prison


கள்ளக்குறிச்சி, 20 நவம்பர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் வரஞ்சரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவர் கொங்கராயப்பாளையம் பகுதியில் சப்ளையர்ஸ் கடை நடத்தி வந்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நாராயணசாமிக்குச் சொந்தமான டாட்டா ஏஸ் வாகனம் மீது, புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரது இருசக்கர வாகனம் மோதியதாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ராமு மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன், அவரது தாய் பரமேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் அஜித்குமார், அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 5 பேரும் நாராயணசாமி வீட்டிற்குள் புகுந்து, பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, அவரை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில், 5 பேரையும் வரஞ்சரம் போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை, கள்ளக்குறிச்சி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சையத் பர்கத்துல்லா, குற்றவாளிகளான ராமு, ராஜேந்திரன், பரமேஸ்வரி, அஜித்குமார், அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தனித்தனியே அபராதம் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.

அபராதத் தொகை கட்டத் தவறினால் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், பரமேஸ்வரியை வேலூர் பெண்கள் மத்திய சிறையிலும், மற்ற 4 பேரை கடலூர் மத்திய சிறையிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN