Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்ட விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக இருந்து செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அமல்படுத்தியுள்ளது. இந்தச் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு படிவங்கள் வீதம் வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் முதலில் அந்தப் படிவங்களை கேட்டுப்பெற்று, அவற்றில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை கவனத்துடன் நிரப்பி, வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் அவற்றை வழங்க வேண்டும்.
நிரப்பப்பட்ட படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடமோ வழங்கலாம். கணக்கீட்டு படிவங்களை நிரப்பும் முறை குறித்துப் பொதுமக்களிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது.
2002 ஆம் ஆண்டு வாக்காளர் விபரங்களைத் தேடுவது அவர்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. பா.ஜ.கவின் கைப்பாவையாக இருந்து செயல்படும் தேர்தல் ஆணையம் ஹிட்லர் பாணியில் மக்களிடையே பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. பல்வேறு குழப்பங்கள், பதட்டங்களுக்கிடையே இந்தத் திருத்தம் நடைபெறுவதால் பொதுமக்களில் பெரும்பாலானோரின் வாக்குரிமை பறிபோகும் அபாய நிலை உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தி.மு.க எதிர்த்தாலும், பொதுமக்களின் வாக்குரிமை பறிபோவதைத் தடுக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் தி.மு.க உறுதியோடு இருக்கிறது. தி.மு.க தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 3 தொகுதிகளிலும் தன்னார்வலர்களைக் கொண்டு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த உதவி மையங்களில் இருக்கும் தன்னார்வலர்கள் வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை நிரப்புவதற்கும், வாக்காளர்களின் 2002 ஆம் ஆண்டு விபரங்களைத் தேடி எடுக்கவும் உதவுவார்கள். மேலும், வருகின்ற 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
பொதுமக்கள் அனைவரும் உதவி மையங்களையும், சிறப்பு முகாம்களையும் பயன்படுத்தி தங்கள் வாக்குரிமையை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b