Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
திமுக அரசைக் கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (நவ 21) நடைபெறவுள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிகையில் கூறப்பட்டிருப்பதாவது,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத் திட்டப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதையும்;
திமுகவைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுகவினர் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதையும் கண்டும் காணாமலும் இருந்து வரும்
திமுக அரசைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அதிமுக சார்பில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், கள்ளக்குறிச்சி நகராட்சி, கச்சேரி சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில், கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர் இரா. குமரகுரு முன்னாள் எம்.எல்.ஏ.தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின்
இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b