Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
சென்னை ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட பட்டேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவர் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதற்காகவும், பார்வையற்றோருக்கு டிஜிட்டலே கண்களாக இருக்கும் வகையிலும் ஏஐ தொழில்நுட்பத்திலான பல்வேறு செயலிகள் மற்றும் இணைய தளங்களை உருவாக்கியுள்ளார்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்வதில் பொதுமக்கள் ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் எஸ்ஐஆர் படிவ விநியோகம் மற்றும் பூர்த்தி செய்த படிவங்களை வசூலிக்கும் அரசு ஊழியர்களும் பணிச்சுமை காரணமாக சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும் எஸ்ஐஆர் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்வதற்கு பழைய ஆவணங்கள் இல்லாத நிலையும், அதனை தேர்தல் ஆணையத்தில் பெற முடியாத நிலையும் இருந்து வருகிறது. பொதுமக்கள் சந்திக்கிற இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும்விதமாக ஏஐ தொழில்நுட்பத்திலான இணையதளத்தை அப்பாஸ் உருவாக்கியுள்ளார்.
எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு தான் தயாரித்த இணையதளம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அப்பாஸ் கூறியதாவது,
எஸ்ஐஆர் படிவத்தை எளிதில் பூர்த்தி செய்யும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறேன். படிவத்தில் கேட்கப்பட்டிருக்கிற வாக்காளர் பெயர், உறவினர் பெயர், பாகம் எண் போன்ற எந்த தகவல்கள் வேண்டுமானாலும் இந்த இணையதளத்தின் உதவியால் பெற்றுக்கொள்ளலாம். அந்த விவரங்கள் மட்டுமல்லாமல், படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பதும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கற்றுத்தரப்படுகிறது.
இதற்காக ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட 38வது வார்டில் உள்ள வாக்காளர்களின் விவரஙளை வைத்து இந்த இணையதளத்தை உருவாக்கி இருக்கிறேன். இதன்மூலம் இங்குள்ள மக்களுக்கு உதவ முடிகிறது என்றார்.
மேலும் ஒரு வார்டுக்கு மட்டும் செய்யப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள 6 கோடி வாக்காளர்களுக்கும் பயன்படும் வகையிலும் உருவாக்க இயலும் எனவும், இதற்கு தமிழ்நாடு அரசும், தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்தால் தயார் செய்ய இயலும் எனவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN