Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 20 நவம்பர் (ஹி.ச.)
மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும் காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, ஈசிஆர் சாலையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினர் ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் இணைந்து சாகர் கவாச் எனப்படும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை தொடங்கியுள்ளனர். இன்றும் நாளையும் இந்த ஒத்திகை நடைபெற உள்ளது.
ஒத்திகையின் முதல் நாளான இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமப்பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் போலீஸார் கடற்கரையில் தீவிர ரோந்து மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திலும், சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள கல்பாக்கம் பகுதிக்கு செல்லும் சாலையிலும் சதுரங்கப்பட்டினம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கல்பாக்கம் உள்பட கடலோர கிராமப்பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, தீவிரவாதிகள் போல் கடல் வழியாக ஊடுருவ முயலும் நபர்களை பிடிக்கும் ஒத்திகையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கடற்கரையில் கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் ஈடுபட்டு வரும் நிலையில், சதுரங்கப்பட்டினம், வெங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஈசிஆர் சாலையில் போலீஸார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN