Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 3.06.2021 அன்று முதலமைச்சர், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் 2021-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பன்னிரெண்டு அறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், 2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட சென்னை, மாவட்டத்தைச் சேர்ந்த தெ. ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரா. காமராசு (ஆய்வுத் தமிழ்). தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த க. சோமசுந்தரம் (எ) கலாப்ரியா (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று இலக்கிய மாமணி விருதுகளையும், விருதிற்கான 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந.அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b