Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி,20 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது.
இந்த நிலையில் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த நிராகரிப்புக்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசுக்கு அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான தமிழக அரசின் பரிந்துரையை தெரிவித்து வந்த கடிதங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.
அந்த ஆய்வில் சில விஷயங்கள் கவனிக்கப்பட்டன. கோவையில் 34 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்ட நிலையில் அங்கு ஏற்கனவே உள்ள சாலைப்போக்குவரத்தின் பயண நேரம் மெட்ரோ ரெயிலின் பயண நேரத்தை விட குறைவாக உள்ளது.
மேலும் மக்கள் தொகையை கணக்கிடும்போது சென்னை 1- ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை விட 4 லட்சம் பேர் மட்டுமே அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
பயண நேரத்தின் அடிப்படையில் மக்கள் மெட்ரோவுக்கு மாற வாய்ப்பில்லை என தெரிய வருகிறது.
மதுரையைப் பொறுத்தவரை அங்கு மக்கள் தொகை குறைவாக உள்ளது. மெட்ரோ ரெயில் இயக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள் இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு இருக்கிறது.
ஆனால் 2011- ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதுரையின் மக்கள் தொகைய 15 லட்சம் மட்டுமே. இந்த காரணங்கள் தவிர மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக பல கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும். பல கட்டிடங்கள் மிக விலை உயர்ந்ததாக இருக்கலாம்.
இதனால் பொது மக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். கோவையின் மக்கள் தொகை 15.84 லட்சம் உள்ளது.
எனவே 20 லட்சம் மக்கள் தொகைக்கு மேற்பட்ட நகரங்களிலேயே மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM